சங்க கால நிலவியல் பண்பாடுகள்
Abstract
தொல்காப்பியர் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்வியலை அமைத்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றை ஐந்திணைகளாகக் கொண்டு அவற்றிற்கு மலர்களின் பெயரைச் சூட்டி, அந்த நிலங்களுக்கு ஏற்ப அவற்றிற்குக் கருப்பொருள்களை உருவாக்கினார். ஐவகை நிலங்களுக்கும் உரிய தெய்வம். மக்கள், உணவு, இசைக்கருவி, தொழில், புல், பறை, பறவை, மரம் போன்றவற்றை அவற்றின் கருப்பொருள்களாக வடிவமைத்தார். அந்நிலங்களில் வாழும் மக்களின் உணர்ச்சி நிலையை மூலமாகக் கொண்டு அந்நிலங்களை உணர்ச்சிக் களமாக்கினார். ஒவ்வொரு உணர்ச்சியையும் கற்பிதப்படுத்தி அவற்றிற்கேற்பக் காலங்களைச் (பருவங்கள்) சிறுபொழுது, பெரும்பொழுது எனப் பாகுபடுத்தினார். இயற்கை அறிவியலின் வளர்ச்சியைக் குறிப்பதே நிலவியல். பூமியின் தோற்றம், வடிவம் மற்றும் அதன் வரலாறு போன்றவற்றைப் பற்றி சிந்தித்து அறியும் அறிவியல் நிலவியல் எனப்படுகின்றது.