நற்றிணையில் நிலவாழ் பறவைகள்
Abstract
உலகம் தழைத்து இனிது ஓங்கப் பண்டைய தமிழ்ப் புலவர்கள் அருளிச் செய்தவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம் பெற்றுள்ள நூல் நற்றிணை. நற்றிணை 'நல்' என்னும் அடை மொழியும், அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் 'திணை'என்னும் பெயரும் சேர்ந்து நற்றிணை என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இந்நூல் ஒன்பது அடி முதல் பன்னிரெண்டு அடிகள் வரை அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. இதைத் தொகுத்தவர் யார் எனத் தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை 'நற்றிணை நானூறு' என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்கால சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. இந்நூல் இயற்கையையும் இயற்கையோடு இயந்த மானிட உணர்ச்சிகளையும் தனித்தன்மையோடு கூறுகிறது. அக்கால மக்களும் புலவர்களும் தாம் வாழும் நிலத்தின் கால நிலைகளையும், புவியியலையும், உயிர்களின் இயக்கங்களையும் இயல்பாகவே அறிந்திருந்தனர். அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள், நிலவாழ் உயிரினங்கள், நீர் நிலவாழ் உயிரினங்கள் என அனைத்தும் நிலப் பண்பாட்டை சார்ந்தது என்பதை சங்க இலக்கியமான நற்றிணையின் வழி அறிய முடிகிறது. தமிழர்கள் நிலத்தோடு தொடர்புடைய அறிவை மிகுதியாகப் பெற்றிருந்தனர். வாழிடங்கள் குறித்த தெளிவும், சூழல் குறித்த அறிவும் சங்க கால மக்களுக்கு இருந்ததை அறிய முடிகிறது. பறவைகளின் வாழிடங்கள், உணவுகள், வாழ்வியல் போன்ற செய்திகள் நற்றிணையில் காணப்படுகிறது. நிலவாழ் பறவைகளை நற்றிணையின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மஞ்ஞை, பீலி மஞ்ஞை, கூகை, கோட்டன், குடிஞை, குழறும், கான வாரணம், அசுணம் பறவை, கணந்துள், கிளி, குரீஇ.