திணை நோக்கில் வந்தாரங்குடி நாவல்
Abstract
மனிதன் தன் சமூகவாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள தனக்குத்தானே சில நெறிமுறைகளையும் பண்பாட்டு பின்புலங்களையும் உருவாக்கிக் கொண்டு வாழ்கிறான். அவற்றுள் சில நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தனது அனுபவங்களினூடே கற்று வாழ்வியலோடு பிணைத்துக்கொள்கிறான். அவனது வாழ்வியல் என்பது சடங்குகள், கலை, நம்பிக்கைகள், பண்பாடு, இசை, மரபுசார் அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். மனிதன் தான் வாழும் நிலப்பரப்பிற்கு ஏற்ப தன் வாழ்க்கை முறைகளை வகைப்படுத்தி வாழ்ந்துள்ளான் என்பதை தமிழின் முதன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் விளக்குகிறது. நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்து அந்நிலமக்கள் செய்யும் தொழில்களின் அடிப்படையில் குறவர், ஆயர், உழவன், சேர்ப்பன், மறவர் என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டனர். வயலும் வயல் சார்ந்த இடமான மருதத் திணையின் மக்கள் மண் சார்ந்த மரபுகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். கண்மணி குணசேகரன் எழுதிய வந்தாரங்குடி நாவல் நடுநாட்டு மக்களின் மருத நிலம் சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. அதனடிப்படையில் வந்தாரங்குடி நாவல் வெளிப்படுத்தும் நடுநாட்டு மக்களின் மருத நிலம் சார்ந்த நிலவியல் பண்பாடுகளை தொல்காப்பியத்தின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. திறவுச் சொற்கள்: வந்தாரங்குடி, நடுநாடு, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், மருதநிலம்